Monday, May 6, 2013

Work at Home ! உண்மைகளும் பொய்களும் ! part 1

இன்றைக்கு   இணையத் தளத்தில் உலவுகின்ற அத்தனை பெரும் கண்டிப்பா இந்த work at home மற்றும் online business பத்தின விளம்பரங்களை பார்த்திருப்பீங்க. சிலபேர் அத கிளிக் பண்ணி பார்த்திருப்பாங்க சில பேர் தங்க மின்னஞ்சல் முகவரிய பயன் படுத்தி உள்ளே போய்  என்ன தான் இருக்குன்னு பார்த்திருப்பாங்க ( அப்பறம் தொடர்ந்து வர்ற மின்னஞ்சல் குப்பைகளால தவிச்சிருப்பாங்க) சில பேர் கண்டும் காணாம இது எல்லாம் ஏமாத்து வேலை ன்னு எட்டிக் கூடப் பார்க்காம விட்டிருப்பாங்க. வேறு சிலரோ பணத்தை கட்டி ஏமாந்தும் போய்  இருப்பாங்க. இது பத்தி நிறைய பதிவுகள் வந்து இருக்கலாம், ஆனா எனதும் என்னுடைய நண்பர்களினதும் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இது யாருக்காவது பயன்படலாம் இல்ல பயன்படாமலும் போகலாம். ஆனா இது என்ன, உண்மையிலேயே இதில் உபயோகம் உள்ளதா இல்லை ஏமாற்று வித்தை தானா என அறிய விரும்பும் சாதாரணர்களுக்கு சாதாரணமானவளான  நான் எழுத நினைக்கிறேன். IT துறையினருக்காகவோ மற்றும் இதில் அடிபட்டவர்களுக்காகவோ இது எழுதப் படவில்லை.

சரி இந்த work at  home  என்னும் இந்த வேலை உண்மையிலேயே பணம் தர வல்லதா என்று கேட்டால். நிச்சயம் ஆம் என்பது தான் பதில். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வியே. விளம்பரங்களில் சொல்வது போல பார்க்கும் வேலை யை விட்டு விட்டு நிரந்தரமாக இதையே வருமானத்துக்கு நம்பி இருக்கலாமா? ஒரே கிளிக் இல் 1000 $ மற்றும் six  figure income  எல்லாம் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில் . இங்கே பிரச்சனையே இது தான். அலுவலகத்தில் மாடாய் உழைக்க தயாராக இருக்கும் நாங்கள் கம்ப்யூட்டர் இல் என்றதும் அதிகம் கஷ்டப் படாமல் சுலபமாக ஆனால் அதிக அளவில் காசு வர வேணும்னு நினைக்கறோம். அதனாலேயே உண்மையாக வருமானம் தரக்கூடிய ஒரு விஷயத்தை அலட்சியப் படுத்துகிறோம். இல்லை என்றால் பேராசைப் பட்டு காசைப் போட்டு ஏமாறுகின்றோம்.
உண்மையான இன்டர்நெட் வேலை என்பது எல்லோராலும் செய்யக் கூடியதாகவும் இலவசமாக இணையக் கூடியதாகவுமே இருக்கும். Pay  a  small amount of 99 cents ன்னு வர்றது கூட உங்களை ஏமாற்றும் யுக்தி தான். 
இனி வெவ்வேறு வகையான பொதுவாகக் காணப்படுகின்ற work at  home  வகைகளைப் பார்ப்போம்.
1. வீட்டிலேயே பொருட்களை assemble  பண்ணுவது.
இதற்கு நீங்கள் குறித்த கம்பனியிடம் பணம் கட்டி மூலப் பொருளைக் கொள்வனவு செய்ய வேண்டும். அதிலிருந்து அவர்கள் தரும் guide க்கு ஏற்ப சிறிய விளையாட்டு பொம்மைகள் மற்றும் bracelet வகைகள் செய்து அவர்களிடம் அனுப்ப வேண்டும். அவர்கள் ஒரு பொருளுக்கு இத்தனை டாலர் என்று கணக்கிட்டு தருவார்கள் என்று விளம்பரம் செய்வார்கள். இதை விட முட்டாள்தனமான விடயம் வேறு எதுவும் இல்லை. இன்றைக்கு dollarama(கனடாவில் அதிகமாக்கக் காணப்படும் ஒரு கடை. இங்குள்ள பொருட்கள் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டு 1$-5$ க்குள் விற்கப் படுகின்றன). க்களிலேயே அழகான விளையாட்டு பொம்மைகள், bracelets என்பன கிடைக்கின்றன. அதை விட உங்களுக்கு அவர்கள் தரும் மூலப் பொருட்களுக்கான விலை மிகவும் அதிகமானது. அதைவிட தரமான மூலப் பொருட்களும் dollarama  க்களில் வாங்கிக் கொள்ளலாம். அப்படி இருக்க நீங்கள் செய்து அனுப்பும் இந்தப் பொருட்கள் உங்களுடைய ஊதியத்தின் பெறுமதி கூட பெற முடியாது. அப்படி இருக்கும் பொது அவர்கள் எப்படி நீங்கள் செய்த வேலைக்கு பணம் தருவார்கள்? இது வெறுமனே சில தரம் குறைந்த பொருட்களை பெரிய விலைக்கு உங்களிடம் மூலப் பொருள் எனக் கூறி விற்றுவிட்டு அம்பேல் ஆகும் யுக்தி மட்டுமே. நீங்கள் கை வலிக்க பொருட்களை செய்து அனுப்பி விட்டு பார்த்து பார்த்து சோர்ந்து போய்விடுவீர்கள் .
2. Air filter , water filter போன்றவை விற்கும் agent வேலை.
இதற்கு நீங்கள் பொது மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு கம்பனியின் இந்த பொருட்களை விற்க வேண்டும். அதற்கு முதல் நீங்கள் அந்த பொருட்களை வாங்குவதற்கு வற்புறுத்தப் படுவீர்கள்.( உங்களுக்கு அதன் பயன்பாடு தரம் என்பன தெரியாமல் போனால் எப்படி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்ல முடியும் என்று கேட்கப் படுவீர்கள் அத்துடன் வாங்குமாறு மறுபடி மறுபடி வற்புறுத்தப் படுவீர்கள். சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் water,Air filter களே எம்மைப் போன்ற லோவேர் மிடில் கிளாஸ் மக்களுக்கு போதுமானது. இவர்களின் பொருட்களோ எம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கும். 
இங்கு work at  home  opportunity என்பதே விற்பனை முகவரித் தேடும் விளம்பரம் அல்ல. உங்களுக்கு ஒரு பொருளை தலையில் கட்டி விடுவதற்கான விளம்பரம்.அத்துடன் அவர்கள் வேலை முடிந்துவிடும். நீங்களும் இதே யுக்தியைக் கைக்கொண்டு மேலும் சில பொருட்களை விற்றீர்கலேயானால் கொஞ்சம் கமிஷன் மூலம் காசு பார்க்கலாம்..
3. விட்டமின்கள் மற்றும் சில உடல் எடையைக்  குறைக்கும் (weight loss ) உணவு, உணவுப் பதிலீடுகள் (supplements) விற்பனை .
இங்கும் முதலில் நீங்கள் பொருட்களை வாங்கி பயன் படுத்துமாறு அறிவுறுத்தப் படுவீர்கள். online இல் பொது மக்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் கம்பனிகள் அதிகம் என்றாலும் மீட்டிங் வைப்பது நண்பர்களிடையே விளம்பரப் படுத்துவது என்பனவற்றைப் அதிகம் கையாளும் ஒரு கம்பனியே வடஅமெரிக்கா வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்தக் கம்பனி டூத் பேஸ்ட் இலிருந்துபியுட்டி  பார்லருக்கு தேவையான பொருட்கள், விட்டமின்கள், air பில்டர்கள் என பல தரப் பட்ட பொருட்கள் விற்பனை செய்வார்கள். இதில் நீங்கள் பணம் கட்டி உறுப்பினர் ஆக வேண்டும். பின்னர் ஒவ்வொரு மாதமும் கூட்டங்களுக்கு போக வேண்டும். அவர்களிடம் தொடர்ந்து பொருட்கள் வாங்க வேண்டும். இங்கும் அதே கதை தான். நீங்கள் பொருள் வாங்குபவராக இருப்பெர்களே தவிர உங்களால் அந்த பொருட்களை மற்றவர்களுக்கு இலகுவில் விற்று விட முடியாது. ஆனால் நீங்கள் திறமைசாலியாக இருந்து மற்றவர் தலையில் பொருட்களைக் கட்டுவீர்களே யானால் நீங்களும் கொஞ்சம் கமிஷன் பார்க்கலாம். ஆனால் முதலில் உங்கள் கைகாசு போட்டு பொருட்களை வாங்க வேண்டும்.இதனை இன்டர்நேஷனல் லெவலில் பண்ணுவதற்கு இதே கம்பனியின் இன்னொரு பெயரில் இயங்கும் கம்பனியில் மறுபடி பணம் கட்டி உறுப்பினராக வேண்டும். நீங்களும் பயன்படுத்த வேண்டும். இவர்கள் அதிகம் baby boomers மற்றும்  residual income  பற்றி பேசுவார்கள்.இந்த  baby boomers மற்றும்  residual income என்றால் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


Thursday, December 24, 2009

Saturday, June 27, 2009

குமிழிகள்


சோப்பு நுரைஎடுத்து ஊதிக் குமிழிவிடும்
என்குழந்தை குழலிருந்து
சற்றுப் பெருங் குமிழி....
வெளிவந்த உடனேயே ஒளியுறிஞ்சி

வண்ணத்தில் ஜாலம் காட்டிற்று....
மெல்ல மேலெழுந்து....

வேடிக்கை காட்டி மிதந்து செல்கிறது.
வானம் தொட்டுவிடும் என்று
வாய்பிளந்து பார்க்கையிலே
வழியில் மோதிப் பட்டென்றுடைந்ததது!
என் மனதில் என் சோதரர்கள்..... இளமையிலே
கனவுக் குமிழியில்லா வாழ்வை வாழ்ந்தின்று
இயந்திரமாய் வாழும் என் அண்ணன்....,
ஒன்றுக்கு இரண்டாய்
எதிர்பார்ப்பு எனுங்குமிழி உடைந்து
மனம் கசந்து போயிருக்கும் என் தம்பி..
இன்று அவன் இனித்தனக்கு
நனவில் வருவதுவும்
என் மனதில் கனவுக் குமிழி என்றே
நான் நினைப்பேன் என்கின்றான்.
அவன் மனதில் மறுபடியும்
வண்ணக் கோலம் கிளம்பாதா?

அப்போதும் அவன் மனது
நனவும் உணர்ந்து நடக்காதா?
என்றே என் மனது அடித்துக் கொள்கிறது...
மற்றவனோ...
ஒரு குமிழி உடைந்தழுத
வேதனையை மறந்து விட்டு

மறுபடியும் அந்தரத்தில் குமிழ் ஊதி நிற்கின்றான்.
ஊதிப் பெருத்த குமிழ் எக்கணமும் உடையுமென்று
ஏங்கித் தவிக்கிறது என் மனது..
அவன் மீண்டும்
தரை தொட்டு நடக்க மாட்டானா என்று

தவியாய் தவிக்கிறது...
கனவும் அது கொடுக்கும் கற்பனையும் அறிந்தாலும்
தரை கொண்டு அழகாய் நடந்தவனோ.....
தன்வாழ்வே நீர்க்குமிழி என்றே சொல்லி விட்டு
மரணத்துள் அடங்கிவிட்டான்.
நான் மட்டும்...........என் கனவுக் குமிழ் உடைந்து

மனதுக்குள் மரணித்து
மறுபடியும் உயிர்த்தின்று வாழ்கிறேன்.
தான் விட்ட வண்ணப் பெரும் குமிழி

வடிவிழந்து போனதற்காய்
ஏதும் கவலை இன்றி மறுபடியும்
குமிழூதி
வாய் விட்டுச் சிரிக்கின்றாள் என் குழந்தை.-நாளை இவள் யார் கனவு உடைவதற்குகாரணமாய் ஆவாளோ?-இல்லையெனில்
கனவுடைந்து கலங்கி நிற்பவர்க்கு
மருந்தாகி அணைப்பாளோ? - அன்றி இவள்

தானே குமிழூதி அது உடைந்து நாளை
கலங்கித்தான் கிடப்பாளோ? இவையெதுவும் இல்லாமல் கனவுக்குள் களிக்கும் அதேநேரம் மறக்காமல்
நனவுக்குள் வாழ்ந்து அழகாய் நடப்பாளோ?யார் அறிவார்? - இளமையெனும்
காலத்தின் கனவுகளின் மத்தியிலும்
நனவாய் தரைதேய்த்து நடந்து வாழ்வதற்கு வழி காட்ட யாரும் வருவாரா மனிதருக்கு
?