
சோப்பு நுரைஎடுத்து ஊதிக் குமிழிவிடும்
என்குழந்தை குழலிருந்து
சற்றுப் பெருங் குமிழி....
வெளிவந்த உடனேயே ஒளியுறிஞ்சி
வண்ணத்தில் ஜாலம் காட்டிற்று....
மெல்ல மேலெழுந்து....
வேடிக்கை காட்டி மிதந்து செல்கிறது.
வானம் தொட்டுவிடும் என்று
வாய்பிளந்து பார்க்கையிலே
வழியில் மோதிப் பட்டென்றுடைந்ததது!
என் மனதில் என் சோதரர்கள்..... இளமையிலே
கனவுக் குமிழியில்லா வாழ்வை வாழ்ந்தின்று
இயந்திரமாய் வாழும் என் அண்ணன்....,
ஒன்றுக்கு இரண்டாய்
எதிர்பார்ப்பு எனுங்குமிழி உடைந்து
மனம் கசந்து போயிருக்கும் என் தம்பி..
இன்று அவன் இனித்தனக்கு
நனவில் வருவதுவும்
என் மனதில் கனவுக் குமிழி என்றே
நான் நினைப்பேன் என்கின்றான்.
அவன் மனதில் மறுபடியும்
வண்ணக் கோலம் கிளம்பாதா?
அப்போதும் அவன் மனது
நனவும் உணர்ந்து நடக்காதா?
என்றே என் மனது அடித்துக் கொள்கிறது...
மற்றவனோ...
ஒரு குமிழி உடைந்தழுத
வேதனையை மறந்து விட்டு
மறுபடியும் அந்தரத்தில் குமிழ் ஊதி நிற்கின்றான்.
ஊதிப் பெருத்த குமிழ் எக்கணமும் உடையுமென்று
ஏங்கித் தவிக்கிறது என் மனது..
அவன் மீண்டும்
தரை தொட்டு நடக்க மாட்டானா என்று
தவியாய் தவிக்கிறது...
கனவும் அது கொடுக்கும் கற்பனையும் அறிந்தாலும்
தரை கொண்டு அழகாய் நடந்தவனோ.....
தன்வாழ்வே நீர்க்குமிழி என்றே சொல்லி விட்டு
மரணத்துள் அடங்கிவிட்டான்.
நான் மட்டும்...........என் கனவுக் குமிழ் உடைந்து
மனதுக்குள் மரணித்து
மறுபடியும் உயிர்த்தின்று வாழ்கிறேன்.
தான் விட்ட வண்ணப் பெரும் குமிழி
வடிவிழந்து போனதற்காய்
ஏதும் கவலை இன்றி மறுபடியும் குமிழூதி
வாய் விட்டுச் சிரிக்கின்றாள் என் குழந்தை.-நாளை இவள் யார் கனவு உடைவதற்குகாரணமாய் ஆவாளோ?-இல்லையெனில்
கனவுடைந்து கலங்கி நிற்பவர்க்கு
மருந்தாகி அணைப்பாளோ? - அன்றி இவள்
தானே குமிழூதி அது உடைந்து நாளை
கலங்கித்தான் கிடப்பாளோ? இவையெதுவும் இல்லாமல் கனவுக்குள் களிக்கும் அதேநேரம் மறக்காமல்
நனவுக்குள் வாழ்ந்து அழகாய் நடப்பாளோ?யார் அறிவார்? - இளமையெனும்
காலத்தின் கனவுகளின் மத்தியிலும்
நனவாய் தரைதேய்த்து நடந்து வாழ்வதற்கு வழி காட்ட யாரும் வருவாரா மனிதருக்கு?